விஜய் மீது போலீஸார் வழக்கு பதிவு!

நடைமேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டில் விஜய் நடந்து வருவதற்காக ‘ரேம்ப் வாக் மேடை’ அமைக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் புடைசூழ அதில் விஜய் நடந்து சென்றபோது தொண்டர்கள் பலரும் அவரை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தடுப்பின் மீது ஏறி மேடையை நோக்கி சென்றனர்.


அப்போது மேடை மீது ஏறிய ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர் குண்டுகட்டாகத் தூக்கி கீழே வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர், தனது தாயாருடன் நேரில் சென்று, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

அப் புகாரில், ‘தலைவரைப் பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறியவுடன், பவுன்சர்கள் எனும் குண்டர்கள் என்னை அலேக்காகத் தூக்கி எறிந்தனர். இதில் எனது மார்பக வலது விலா எலும்பு அடிபட்டு வலி அதிகமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன்.

இதுகுறித்து கட்சித் தலைவர் பேசுவதாகக் கூறி தவெக பெரம்பலூர் மாவட்ட பொருப்பாளர்கள் என்னிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் உதவிக்குகூட யாரும் என்னை நேரில் வந்து பார்ககத் தவறிவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் சரத்குமார்.

சரத்குமார் அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் நிலைய போலீஸார் தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 189(2), 296(b), 115(1) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்ட இளைஞர் நான் தான் என அஜய் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சரத்குமார் என்பவர் பொய்த் தகவலைப் பரப்பி வருவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.