செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது அவருக்கும் அக் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்துவிட்டு அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு தவெக சார்பில் இரண்டு பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Comments are closed.