சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பண மோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவரும் நிலையில், சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் திமுக எம்எல்ஏவும் அமைச்சர் பெரியசாமியின் மகனுமான செந்தில்குமாரின் அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில், அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய 5 சிஆர்பிஃஎப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எம்எல்ஏ-வின் அறையை சோதனை செய்யும் முன்பாகவே ஆதாரத்துக்காக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.