பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்: 9 பேர் காயம்!

பாமக மாநில இணை பொதுச் செயலாளரும் சேலம மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான அருள் மீது நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர். 6 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட 20 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்களில் சேலம் நோக்கி புறப்பட்டனர்.
வடுகத்தம்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள தரைப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பாமக தலைவர் அன்புமணியின் ஆதரவாளர்களான சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், மற்றும் அவரது தரப்பினர் ஆயுதங்களுடன் வழிமறித்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இத் தாக்குதலில் 6 கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், அருள் ஆதரவாளர்கள் ஸ்ரீரங்கன், ராஜமாணிக்கம், ஆனந்த், மணிகண்டன், விஜயகுமார், லோகேஷ், நடராஜன், கோவிந்தராஜன், கஜேந்திரன் என 9 பேர் காயமடைந்தனர்.

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.