கோவை இருகூர் அருகே சுமார் ஒன்னரை வயது ஆண் குழந்தை தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊர்ஜிதப்படுத்தாத தகவல் பரவி வைரலாகி வருகிறது.
கோவையை அடுத்த இருகூர் ராவுத்தர் பாலம் அருகே ஆண் குழந்தை ஒன்று பிணமாகக் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டு, அக் குழந்தையின் உடiலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, அக் குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ரத்தம் ஆகியவை கிடந்தன. ஒன்னரை வயது குழந்தை தண்டவாளப் பகுதியில் நடந்து செல்ல வாய்ப்பில்லை. எனவே அக்குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது குழந்தையின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஒன்னரை வயதுக் குழந்தை எப்படி உயிரிழந்தது என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை. ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
அக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பொதுமக்களின் சந்தேக வாதத்தை காவல்துறையினர் மறுக்கின்றனர். அதற்கான எந்த அடையாளமும் இல்லை என்கின்றனர் காவல்துறையினர்.

Comments are closed.