மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மக்களுக்கு உயர் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்றார்.
கல்வியும் மருத்துவமும் திராவிட அரசின் இரு கண்களாக உள்ளன என்றும், கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறவிருக்கிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் 1256 முகாம்கள் நடைபெறவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கை ஒரு கோப்பாக போடப்பட்டு, அவரவர் கையில் வழங்கப்படும். எப்போது எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் இந்த கோப்பை நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இத் திட்டத்தின்கீழ், மக்களுக்கு புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியக்கூடிய உயர்தர மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும். காலையில் பரிசோதனை செய்தால் மாலையில் வாட்ஸ்ஆப் மூலம் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளை தெரிந்துகொள்ளும் வகையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.