தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்த பிறகு அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் முடிவு,” என்றார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி மீது யாருக்கும் மன வருத்தம் இல்லை. நாம் தோற்றுப் போவோம் என நினைப்பவர்கள் தான் மன வருத்தத்தில் உள்ளனர். திமுகவின் பி டீமாக நிறைய பேர் உள்ளனர் என்றார்;.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் நிச்சயம் வருவார்கள். காலம் நிறைய இருக்கிறது. வளமான கூட்டணிதான் வெற்றிபெறும். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. 2011 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஜாதிய அமைப்புகளும் திமுக கூட்டணியில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால், அத் தேர்தலில் ஜெயலலிதாதான் வெற்றி பெற்றார் என்றார் நயினார் நாகேந்திரன்.

Comments are closed.