சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் தொழிலில் செழிக்க வேண்டிய கோவை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருள்களில் செழிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

கொங்கு மண்டலம் என்றால் தனிச் சிறப்பு, மரியாதை உண்டு. அங்கு வருத்தமான சில சம்பவங்கள் நடப்பது வேதனையளிக்கிறது. விடியலை தருகிறோம் எனக்கூறிய அரசு, இன்று விடியா அரசாக உள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பக உள்ள நகரம் கோவை என்று சொன்னார்கள். தற்போது பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள்கள் புழக்கம் பள்ளி, கல்லூரி வாசல்களில் நடக்கிறது.

கூட்டுப் பாலியல் விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர் ஒருவர் 8 மணிக்கு அப் பெண் அங்கு எதற்கு செல்கிறார் என பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனை முதல்வர் கண்டிக்கக்கூடவில்லை.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கல்வி மற்றும் தொழிலில் செழிக்க வேண்டிய கோவை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருள்களில் செழிக்கிறது என நயினார் நாகேந்திரன் பேசினார்.

Comments are closed.