சிபிசிஐடி போலீஸார் மிரட்டியதாக நீதிபதியிடம் குற்றஞ்சாட்டிய சுர்ஜித்!

இரண்டு நாள் போலீஸ் காவல் விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸார் தன்னை மிரட்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளார் சாஃப்ட்வேர் இன்ஜினியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சுர்ஜித் .

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27) கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையான சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் சகோதரியிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரின் இரண்டு நாள் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவ்விருவரையும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுர்ஜித், இரண்டு நாள் காவல் விசாரணையின்போது சிபிசிஐடி போலீஸார் தன்னை மிரட்டியதாக நீதிபதியிடம் முறையிட்டார்.

“டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் என்னை அடிக்கவில்லை. ஆனால், அடிக்க வந்தார்கள். நாங்கள் சொல்வதுபோல நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், உன்னுடைய பெரியம்மா, அண்ணன் ஆகியோரை வழக்கில் சேர்த்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டினார்கள்” என சுர்ஜித் நீதிபதியிடம் முறையிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சிறப்பு உதவி ஆய்வாளரான அவரது தந்தை சரவணன், “ இரண்டு நாள் காவலில் எடுத்தார்கள். ஆனால், என்னிடம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடத்தினார்கள். எந்த வாக்குமூலமும் என்னிடம் எழுதி வாங்கவில்லை. நான் எதிலும் கையெழுத்தும் போடவில்லை. அதே சமயம், என்னை அடித்து துன்புறுத்தவில்லை” என்றார்.

அவ்விருவரையும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சுர்ஜித் மற்றும் சரவணன் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிபிசிஐடி போலீஸார் மீது குற்றவாளிகளே நீதிபதியிடம் நேரடியாகப் புகார் கூறியது நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.