திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் ஒருவரை திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் செய்துள்ளனர் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் பட்டியலினத்தைச் சேர்ந்த முனியப்பன். நகராட்சியின் 20 வார்டு திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது பகுதியில் நடைபெற்ற பணிகளுக்கான நிதி தொடர்பான கோப்பினை முனியப்பனிடம் கேட்டுள்ளார். அப்போது, இளநிலை உதவியாளர் முனியப்பன் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த ரம்யா ராஜா, இதுபற்றி நகர்மன்ற ஆணையரிடம் புகார் அளித்து முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்த நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற அதிகாரிகள் இப்புகார் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முனியப்பனை கவுன்சிலர் ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அப்போது, ‘மன்னித்துவிடுங்கள்’ என முனியப்பன் கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் ‘வார்த்தைகளால் மன்னிப்பு கேட்டால் போதுமா?” எனக் கூறியதைத் தொடர்ந்து, முனியப்பன் வேறு வழியின்றி அவர்கள் அனைவரின் முன்னிலையில் திமுக கவுன்சிலர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து ‘மன்னித்துவிடுங்கள்’ எனக் கூறி கதறி அழுதுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு காரணமான கவுன்சிலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.