அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என பிரதமர் நரேந்திர மோடி தெரவித்துள்ளார்.

கடந்த தலைமுயை சுதந்திரத்துக்கு போராடியது எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இத் தலைமுறை சுயசார்புக்கு போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியத் தலைநகர் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கடந்த சில நாள்களாக, இயற்கை பேரழிவுகள், நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபங்கள். மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகள் கற்பனையில் எட்டாத தண்டனை அளித்திருக்கும் நமது துணிச்சலான வீரர்களுக்கு வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்.

எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டு கொன்றார்கள். இப் படுகொலைகளால் உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது அச் சீற்றத்தின் வெளிப்பாடாகும். ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்.

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று இந்தியா தீர்மானித்தது. சிந்துநதி ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்பதை நம் நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் நீர் எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. ஆனால், நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி தாகத்தில் உள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக எனது நாட்டின் விவசாயிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத சேதங்களை ஏற்படுத்திய ஒப்பந்தம் இது. இப்போது, தண்ணீரின் மீதான உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது. அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது.

இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைமின் கடத்தி சந்தைக்கு வரவுள்ளது.

நமது போர் விமானங்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்ஜின்களை உருவாக்க வேண்டும் என பொறியியல் வல்லுநர்களையும் இளம் விஞ்ஞானிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

சுயசார்பு இந்தியாவே வளர்ந்த இந்தியாவின் அடிப்படையாகும். ஒருவர் மற்றவரை அதிகம் எதிர்பார்த்திருந்தால் சுதந்திரம் என்பது மங்கத் தொடங்கிவிடும். கடந்த தலைமுறை சுதந்திரத்துக்கு போராடியது. இந்த தலைமுறை சுயசார்புக்கு போராட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.