மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளராக இருந்துவந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மல்லை சத்யா தற்போது மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப் போல், மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.


இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.

இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைகோ அறிவித்தார்.

மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்குமாறும் வைகோ தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுவதாக  வைகோ  அறிவித்துள்ளார்.

 

Comments are closed.