மன வளர்ச்சிக்குன்றிய பெண்ணை சீரழித்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
மன வளர்ச்சிக்குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சீரழித்த 55 வயது சலவைத் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் க.எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மன வளர்ச்சிக்குன்றிய 32 வயது பெண் கடந்த 05.10.2021 அன்று க.எறையூர் செப்பலான் மேடு என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவருடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜி (51) என்ற சலவைத் தொழிலாளி சீரழித்துள்ளார். பின்னர், அதற்கடுத்த நாளும் அப் பெண் ஆடு மேய்க்க வந்தபோது அப் பெண்ணை பலவந்தமாக கெடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மன வளர்ச்சிக் குன்றிய பெண் என்பதால், இச் சம்பவம் குறித்து அப் பெண் வேறு யாரிடமும் கூறவில்லை.
நான்கு மாதங்கள் கடந்த நிலையில், அப் பெண்ணுக்கு சரிவர மாதவிலக்கு வராத காரணத்தால், அப் பெண்ணுக்கு வயிற்றில் கட்டி ஏதாவது இருக்கலாம் எனக் கருதி, அப் பெண்ணின் தாய் அவரை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அப் பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப் பெண்ணின் தாய், இதுபற்றி அப் பெண்ணிடம் விசாரித்தபோது, தனக்கு நடந்த அவலத்தை அப் பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் 2022ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எதிரி ராஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், பிணையில் வெளிவந்த ராஜி மீண்டும் தலைமறைவாகிவிட்டதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில், இவ் வழக்கு விசாரணை பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எம்.சுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி இந்திராணி, மன வளர்ச்சிக்குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ராஜிக்கு ஓர் ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், அப் பெண்ணை இரண்டாவது முறையாக பாலியல் வன்புணர்வு செய்தமைக்ககாக மற்றொரு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாநில அரசு ரூ.3,00,000 இழப்பீடு வழங்குவும் உத்தரவிட்டு நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கினார்.

Comments are closed.