மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு எதிரொலியாக, திமுகவைச் சேர்ந்த மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடுத்தடுத்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், உதவி வருவாய் ஆய்வாளர், உதவி ஆணையரின் உதவியாளர், இடைத்தரகர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளின் பாஸ்வேர்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாக மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திமுக மண்டலத் தலைவர்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் மேயர் இந்திராணியிடம் அண்மையில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மேயர் இந்திராணி தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார்.
அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து நாளை மறுநாள் (அக்.17) துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. அவரது ராஜினாமா ஏற்கப்படுமாயின் அன்றைய தினமே புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.