சிறுநீரக விற்பனை மோசடி குறித்த சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை தீவிரமான பிரச்சினையாக கருத வேண்டியுள்ளது. இதில் முகவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இச் சிறுநீரக விற்பனையில் பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம், தென் மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி) பிரேமானந்த சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், பி.கே.அர்விந்த் ஆகியோரைக் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு இம்மோசடி குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இம்மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அஜ்மல் கான் தற்போதைய நிலை அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறிக்கிட்டு, இவ்வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவிறக்கம் செய்யமுடியாதபடி தடை ஏற்படுத்தியுள்ளனர். முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து, மனுதாரருக்கு வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வழங்க வேண்டும். இவ்வறிக்கையை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணைக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. சிறப்புக் குழுவின் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை நவ.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

Comments are closed.