அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). இவர் ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவம் படித்தார். பின்னர், 2023ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் மேல்படிப்பு படித்துவந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.
நிரந்தர வேலை தேடி வந்த அவர், அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒனடறில் பகுதிநேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு பணியில் இருந்த அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் போலே சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இச்சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறியதுடன், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹ{ஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Comments are closed.