தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இக் கைது சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.
இவ்வுத்தரவை எதிர்த்து காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது போலீஸார் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டி பெண் தூய்மைப் பணியாளர்கள் 12 பேர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ் வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மனுதாரர் தரப்பில் ஒரு நபர் விசாரணை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து இரு நீதிபதிகள் அமர்பு உத்தரவிட்டுள்ளது. இவ்வுத்தரவு நியாயமானது அல்ல என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘கைது சமயத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு ஏன் அச்சப்படுகிறது?’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், விசாரணைக்கு அச்சப்படவில்லை என்றும், ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒரு நீதிபதியை ஒரு நபர் ஆணையத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தனது விசாரணையைத் தொடங்கலாம். காவல்துறை தங்களது தரப்பில் உள்ள ஆதராங்களை ஒரு நபர் ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை அக்.10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments are closed.