கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தவெக கட்சித் தலைவர் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்றார்.
இவ் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றார்.
“வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டட நிலையில், தவெகவுக்கு அப்பகுதியில் அனுமதி அளித்தது ஏன்?” என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது, ‘கூட்டணிக்கு கட்சியை சேர்க்கும் உள்நோக்கத்துடன் அரசியல் ஆதாயத்துக்காக பேச வேண்டாம்” என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
இதையடுத்து, முதல்வரின் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி அதிமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இபிஎஸ்: கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது யார்? கரூர் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸில் திமுக மருத்துவரணி வந்தது எப்படி? தண்ணீர் பாட்டில்களில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது எப்படி?
துரைமுருகன்: இரவோடு இரவாக தூங்காமல் தனி விமானம் மூலம் கரூர் சென்ற முதல்வரை பாராட்ட வேண்டாமா?
இபிஎஸ்: அது முதல்வரின் கடமை
மு.க.ஸ்டாலின்: ஆம், எனது கடமைதான். ஆனால், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது முதல்வர் என்ன சொன்னார் என்பதை சொல்லவா?
இபிஎஸ்: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 60க்கும் மேற்பட்டோர் தமிழர்க மக்கள்தான். அங்கு செல்லாதது ஏன்?
மு.க.ஸ்டாலின்: கள்ளக்குறிச்சி சம்பவம் வேறு. அங்கு விஷச்சாராயம் குடிதது உயிரிழந்தார்கள். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
இபிஎஸ்: கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது ஏன்?
மு.க.ஸ்டாலின்: வேண்டுமென்றே அரசியல் நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதால்தான் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் சிவசங்கர் தூத்துக்குடி சம்பவம் குறித்து பேரவையில் பேசியதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் சிவசங்கரின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக்கோரி, பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கை முன்பு அமர்ந்து இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Comments are closed.