மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் கொடுத்த மருத்துவச் சான்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. அதை ரூ.2000க்கு அம் மாற்றுத்திறனாளி வாங்கி இருப்பதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூரில் நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி, நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதனுக்கு மருத்துவச்சான்றின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து, கணேசனிடம் விசாரித்ததில், எம்.கல்லுப்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் (45) என்ற மாற்றுத்திறனாளியிடம் ரூ.2000 கொடுத்து மருத்துவச்சான்றிதழ் பெற்றதாகத் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த சாமிநாதன், கதிர்வேலுவிடம் இதுகுறித்து விசாரித்தார். அதில், கணேசனுக்கு தந்த மருத்துவச்சான்று போலியானது என்பது உறுதியானது.
ஆனால், அதை யார் தயாரித்து கொடுத்தது என்பது உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்க கதிர்வேல் மறுத்துவிட்டார். இதையடுத்து, சாமிநாதன் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் காவல்நிலைய போலீஸார் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கதிர்வேல் கூறினால்தான் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார். ‘நெட்வொர்க்’ ஆக செயல்படுகின்றனரா, எத்தனை ஆண்டுகள் இதுபோன்று செயல்படுகின்றனர் எனத் தெரியவரும்’ என்றனர்.

Comments are closed.