சக பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படமெடுத்த மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களை கழிவறையில் செல்போனில் ஆபாசமாக படமெடுத்த மின் வாரிய ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் இளநிலை கணக்கராகப் பணிபுரியும் 24 வயது பெண், நேற்று வழக்கம்போல் அலுவலக வளாகத்தில் உள்ள கழப்பறைப் பயன்படுத்தச் சென்றுள்ளார்.

அப்போது, அதே அலுவலகத்தில் வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரியும் ராஜராஜேஸ்வரன் என்பவர், கழிப்பறையின் ஜன்னல் வழியாக தன்னைப் படம் எடுப்பதை கவனித்த அப் பெண் ஊழியர் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.

அப் பெண்ணின் சத்தம் கேட்டதும், அங்கிருந்து தப்பியோடிய ராஜராஜேஸ்வரன், எதுவுமே நடக்காததுபோல அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக பெண் ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறி அழுதுள்ளார் அப் பெண்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் இதுகுறித்து மின் கோட்டச் செயற் பொறியாளர் ஜெயலட்சுமியிடம் புகார் செய்தார். மின் வாரிய கோட்டச் செயற் பொறியாளரின் உத்தரவின்பேரில், மின் வாரிய ஊழியர் ராஜராஜேஸ்வரனின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் பல ஆபாசப் புகைப்படங்கள் அதில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அப் பெண் ஊழியர் அளித்த புகாரின்பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விமலா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மதுரை செல்லூர் அருண்தாஸ்புரத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரனை (33) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.