அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந் நிலையில், அதை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அம் மனுவில் சூரியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 4-வது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆக.1ஆம் தேதி உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இவ் வழக்கைத் தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர். எனவே, வழக்கு தொடர அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இவற்றையெல்லாம் உரிமையியல் நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை தேதி குறிப்பிடால் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனு இன்று (செப்.4) விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக செல்லும் என உத்தரவிட்டது.

Comments are closed.