கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக தருமபுரியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என்றால் பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினர் கைகளில் தான் உள்ளது. தமிழகக் காவல்துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பு கொடுத்திருந்தால் கரூரில் 41 பேரை இழந்திருக்க மாட்டோம்.
தமிழக முதல்வர் தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டேன் என்றார். ஆனால் நாடே இன்று தலைக்குனிந்து விட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கிறோம். இச் சம்பவத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய நாடே அதிர்ந்து போய் இருக்கிறது.
எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் இல்லாதவாறு இவ்வளவு மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றாலும், ஆட்சி உங்களது கைகளில்; தான் இருக்கிறது. உங்களைப் பார்த்துதானே கேட்க வேண்டும். ஆனால், யார் மீதும் பழி சுமத்திவிட்டு நீங்கள் தப்பிச் சென்று விட முடியாது.
துணை முதல்வர் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார். கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்? அவர் கண்ணில் பயம் தெரிகிறது என்றார் பழனிசாமி.

Comments are closed.