செங்கோட்டையன் கெடு: எடப்பாடி பழனிசாமி ஆவசர ஆலோசனை!

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள்கள் ‘கெடு’ வைத் தொடர்ந்து, பிரசார சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்துவரும் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


அப்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்களை இணைத்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும், பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்-ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தை மீட்போம் சுற்றப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் திண்டுக்கல்லில் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்படுவார்களா அல்லது ‘கெடு’ விதித்த செங்கோட்டையனுக்கு கட்சியில் இருந்து ‘கல்தா’ கொடுக்கப்படுமா என்பது இந்த ஆலோசனையின் முடிவில் தெரியவரும்.

Comments are closed.