கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்க்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு!

கள்ள ஓட்டு போடமுடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை திமுக எதிர்க்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படுகிறது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போட முடியாது என திமுகவினர் இதை எதிர்க்கின்றனர்.

இதற்கு முன் 8 முறை இத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்கள், வீடு மாறிச் சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. இவர்களின் பெயர்களை நீக்கி, தகுதியானவர்களை இடம்பெறச் செய்வதற்காக எஸ்ஐஆர் பணி நடைபெறுவதால் இதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

காலக்கெடு போதாது என்கிறார்கள். இதற்காக பிஎல்ஓக்கள் (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருமாத காலக்கெடு போதுமானது. இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

வாக்காளர் பட்டியிலில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களிடையே தவறான செய்தியைப் பரப்பி குழப்பி வருகிறது என பழனிசாமி கூறியுள்ளார்.

Comments are closed.