அரசு விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலர் பணி இடைநீக்கம்!

உயர் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொண்ட கூட்டுறவு வார விழாவில் குடி போதையில்  கூச்சலிட்ட கூட்டுறவுத் துறை அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், எம்எல்ஏ-க்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளராகப் பணியாற்றும் பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (50) மது போதையில் மேடையில் நின்று கை தட்டியும், சத்தமாகச் சிரித்தும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். இதனால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதைக் கண்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், செல்வராஜை காவல்துறையினர் உதவியுடன் மேடையில் இருந்து கீழே இறக்கி, அங்கிருந்து ஓர் அறைக்குள் அனுப்பி அடைத்தனர். இக் காட்சி  அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகி வைரலானது.

இது தொடர்பாக,  தஞ்சாவூர் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான பெரியசாமி விசாரணை நடத்தி செல்வராஜை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.