பாகிஸ்தானின் இராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த DRDO மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய ஒப்பந்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்சால்மர் சந்தன் பீல்ட் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகேயுள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் (DRDO) விருந்தினர் மாளிகையில் தற்காலிக மேலாளராகப் பணிபுரிந்துவரும் உத்தரகாண்ட் மாநிலம் பால்யூனைச் சேர்ந்த மகேந்திர பிரசாத் என்ற 32 இளைஞர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்ப்பதாகவும், ரகசிய தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் அந்நாட்டுக்கு பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன்பேரில், இந்திய உளவுத்துறையினர் அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். ரகசியமாக நடைபெற்ற இக்கண்காணிப்பு நடவடிக்கையில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை மகேந்திர பிரசாத் ஐஎஸ்ஐ அமைப்புக்கு பகிர்ந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை ராஜஸ்தான் உளவுத்துறை போலீஸார், ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு விசாரணை மையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போனை கைப்பற்றி தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சோதனைக்கு உட்படுத்தினர்.
இச்சோதனையில், இந்திய ராணுவம் மற்றும் டிஆர்டிஓ குறித்த முக்கிய தகவல்களை மகேந்திர பிரசாத் ஐஎஸ்ஐ அமைப்புக்கு பகிர்ந்து, உளவு வேலை பார்த்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மகேந்திர பிரசாத்தை போலீஸார் கைது செய்தனர்.

Comments are closed.