‘பூமராங்’ ஆன ஆம்புலன்ஸ் வியூகம்: குட்டு வெளிப்பட்டதில் திமுகவினர் அதிர்ச்சி!

‘மக்களை காப்போம், தமிழத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் (ஆக.18) இரவு வேலூர் புறநகர் மாவட்டத்துக்குட்பட்ட அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த குறுகிய தெரு வழியாக ஆம்புலன்ஸ் வந்தது.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளியே இல்லை என்றும், தன்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளில்லா ஆம்புலன்ஸை தொடர்ச்சியாக அனுப்பி மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் வேலையை அரசு செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

ஆம்புலன்ஸ் எண்ணையும் அதன் ஓட்டுநரின் பெயரையும் குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என தொண்டர்களைக் கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அடுத்த கூட்டத்தில் இதேபோல் ஆளில்லா ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிவரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் என எச்சரித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அச் சங்க தலைவர் பிவின் என்பவரது பெயரில் அறிக்கை வெளியாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஊடகங்கள் வெளியிட்ட போலி அறிக்கை

சன் டிவி, நியூஸ் தமிழ், புதிய தலைமுறை உள்ளிட்ட ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களான முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல், ஊடக அறத்தை காற்றில் பறக்கவிட்டு, அதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு செயற்கையாக பரபரப்பை உருவாக்கின.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஊடகங்களில் வெளியான அறிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள்  சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

அதோடு, தங்களது சங்கத் தலைவரின் பெயரையும், சங்க லெட்டர் பேடையும் தவறாகப் பயன்படுத்தி, கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் குற்றஞ்சாட்டியது.
மேலும், இதற்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அச் சங்க மாநில செயலாளர் முகமது இலியாஸ் நேற்று (ஆக.19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது அக் கூட்டத்திற்குள் நோயாளிகள் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி இடையூறு செய்யும் தங்களது மலிவான அரசியல் வியூகம் பூமராங் ஆகி தங்களது குட்டு வெளிப்பட்டுவிட்டதால் ஆளுங்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.