தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்துவந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய சட்டம் ஒழங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு, அவர் அன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாநில டிஜிபி நியமனங்களில் பொறுப்பு என்ற பதவியை பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் என்ற ஐபிஎஸ் அதிகாரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தவெக நிர்வாகி அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிராக ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதனால், பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.