நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி டிச.17ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு காணொலியில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எழுமலை ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்தூணிலும் டிச.3ல் கார்த்திகை தீபத்தை சுப்ரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீஸாரின் கடமை என உத்தரவிட்டார்.

இவ்வுத்தரவை நிறைவேற்றாததால், மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.

இதை அவசர வழக்காக டிச.3ல் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சிப்பிள்ளையார் கோவிலில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உள்பட 10 பேரை அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப் வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சிஐஎஸ்எப் கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன் என்றார்.

இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிச.4ல் தள்ளுபடி செய்தது.

இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச.4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும். போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

இந்நிலையில், இந் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் தரப்பை தீபத்தூணில் தீபம் ஏற்ற இந் நீதிமன்றம் மீண்டும் அனுமதித்தது. ஆனால், அவ்வுத்தரவு நிறைவேற்றப்படவில்லை.


போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பதிலாக மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் திருப்பரங்குன்றத்தில் இருந்துள்ளார். மனுதாரர் தரப்பை அவர் மலையேற அனுமதிக்கவில்லை. அவரும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதால், அவருக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனிகோ திவ்யன் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

தமிழக அரசின் தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகிய இருவரும் வரும் 17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு காணொலி மூலம் இந் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Comments are closed.