காரில் கடத்திவரப்பட்ட மான்களின் சடலங்கள் மீட்பு!

காரில் கடத்திவரப்பட்ட மூன்று மான்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது மீட்கப்பட்டன. எனினும், காரில் இருந்த கடத்தல்காரர்கள் ‘வழக்கம்போல’ தப்பியோடிவிட்டனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வாழையூர்-பெரகம்பி சாலையில் காவல் ஆய்வாளர் இரா.சுகுணா தலைமையில், தலைமைக் காவலர் செல்லதுரை உள்ளிட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, காரில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதைத் தொடர்ந்து, காரைச் சோதனையிட்டபோது, அதில் 3 மான்களின் உடல்கள், 3 துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மான்களின் உடல்களை மீட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மான்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு அதன் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.