அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து நேற்று தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனை மேற்கொண்டதில் அவை அனைத்தும் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு வல்லுநர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், அது வெறும் புரளிதான் எனத் தெரிய வந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து ராயப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.