2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், தற்காலிக அவைத் தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்;டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட், கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவது போன்ற கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதற்காகவும், எல்லோருக்கும் எல்லாம் என ஆசை காட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதற்காகவும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.