நான் சினிமாவை விட்டு விலக விஜய்தான் காரணம்: நடிகை ரோஜா

நான் சினிமாவை விட்டு விலக விஜய்தான் காரணம் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில், திரைப்படங்களில் நடிக்காதது குறித்து அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோஜா அளித்துள்ள பேட்டியில், “நடிகர் விஜய்யுடன் ‘நெஞ்சினிலே’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து அவரது நடிப்பில் ‘காவலன்’ என்ற படத்தில் நடிகை அசினின் அம்மாவாக நடித்தேன்.

அப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், “மேடம், நீங்க எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா? படக்குழுவினர் சொன்னபோது அவர்கள் சும்மா சொல்றாங்கனு நினைச்சேன். நீங்க இக் கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்க இன்னும் நாயகியாகவே பார்த்துவருகிறோம்” எனக் கூறினார்.

விஜய் மட்டுமல்ல, தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது அவரும் இதே கருத்தை கூறினார். அதனால்தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார் ரோஜா.

‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது குறித்து யோசிப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ரோஜா.

Comments are closed.