காதல் விவகாரத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட இளைஞர்!

இளைஞர் ஒருவரை, காதல் விவகாரத்தில், அவரது காதலியின் குடும்பத்தினர் ஆணவ கொலை செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஒன்றியச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் – ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் வைரமுத்து. வயது 28. டிப்ளமா இன்ஜினியரிங் படித்துள்ள வைரமுத்து, மெக்கானிக் ஆக வேலை செய்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை, வைரமுத்து கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அப் பெண் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், செப்.5ஆம் தேதி உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு அப்பெண் வந்தபோது, அவரது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து, தான் வைரமுத்துவை காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், அப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரர்கள் குகன், குணால் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, அப் பெண் வைரமுத்துவின் வீட்டிற்கு வந்ததாகவும், அவ்விருவருக்கும் திருமணம் செய்து வைக்க வைரமுத்துவின் பெற்றோர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், சமாதானமடைந்த அப் பெண், சென்னைக்கு திரும்ப முடிவெடுத்து ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கே வைரமுத்துவை வரச் சொல்லியிருக்கிறார்.

இதுபற்றி தகவலறிந்த, அப் பெண்ணின் சகோதரர் குணால், அப் பெண்ணை கடுமையாகத் தாக்கியதுடன், ‘என் அக்காவுடன் பழகினால் உன்னை கொலை செய்து விடுவேன்’ என வைரமுத்துவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். அப் பெண்ணின் தாயாரும் வைரமுத்து வேலைபார்க்கும் இடத்திற்கு சென்று அவரை கடுமையாகத் திட்டியுள்ளார். இவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புகாரின்பேரில், காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார் அப் பெண். மேலும், எனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் அனுப்பி வைத்தால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என அப் பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர், செப்.12ஆம் தேதி வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் அப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.
அப்போது, பெண்ணி;ன் தாய் மற்றும் சகோதரர்கள் ‘இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை. எங்கள் வீட்டில் எந்த நிகழ்வுகளுக்கும் வரக்கூடாது’ எனத் தெரிவித்து எழுதிக் கொடுக்குமாறு கேட்டதோடு, ‘நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என பார்க்கிறோம்’ என கொலை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (செப்.15) சுமார் 10.30 மணியளவில் வைரமுத்து அன்றைய வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, அவரை வழிமறித்த பெண்ணின் சகோதரர்கள் குகன், குணால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வைரமுத்துவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இருவரும்; ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அப் பெண்ணின் தாயார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது மகளை தனது சொந்த சமூகத்தில் திருமணம் செய்துவைக்க அவர் நினைத்துள்ளார். தாயின் தூண்டுலின்பேரிலேயே அப் பெண்ணின் சகோதரர்கள் இக் கொலையைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.