காவல் நிலையங்களில் சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கிகட்டுப்பாட்டு அறை: உச்சநீதிமன்றம் யோசனை!
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை சில நேரங்களில் காவலர்கள் அணைத்து வைப்பது அல்லது செயல்படாமலேயே போவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையே சிறந்த வழி எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 7-8 மாதங்களில் மட்டும் 11 காவல் நிலைய மரணங்கள் பதிவாகியுள்ளன. காவல் நிலைய மரணங்களில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துவிட்டதாகவும், அல்லது வேறு திசையில் கேமராக்கள் இருந்ததாகவும் கூறி உரிய வீடியோ காட்சிகளை காவல்துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கு வழங்குவதில்லை என்றும் காரணங்கள் கூறப்படுவதாக செய்திகள் வெளியாயின.
இதைத் தொடர்ந்து, காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவது குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ் வழக்கு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ் விவகாரத்தில் காவல்துறையின் காரணங்களைத் தவிர்க்க, மனித தலையீடுகளற்ற முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையே சிறந்தது எனத் தோன்றுகிறது. இதனால் அனைத்து காட்சிகளும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும். இவ் வழியில் மட்டுமே இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இதற்கு மாற்று வழி இருப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நீதிபதி சந்தீப் மேத்தா, அனைத்து சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளையும் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிக்கும் வகையிலான சாதனத்தை அல்லது இயந்திரத்தை உருவாக்க ஐஐடியிலுள்ள வல்லுநர்களை ஈடுபடுத்தலாம். சிசிடிவியில் பதிவான காட்சிகளை கண்காணிப்பதும் மனித தலையீடுகளற்ற தானியங்கியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வழக்கை செப்.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியது கட்டாயம் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பித்திருந்தது.

Comments are closed.