காவலர் நாள் சிறப்பு நிகழ்ச்சி: ரத்ததானம் வழங்கிய காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்!

காவலர் நாளை முன்னிட்டு சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம் முகாமில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் என இருநூறுக்கு மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதன் முதலாக 1859ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஏப்ரல் 29ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அதன்படி, காவலர் நாளையொட்டி சென்னை பெருநகர் காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா வழிகாட்டுதலின்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல குழுக்களாக செப்டம்பர் 6ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 6 காவலர் நாள் தொடர் நிகழ்ச்சிகளாக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சார்பாக வணிக வளாகம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், இருநூறுக்கு மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் ரத்ததானம் வழங்கினர்.

Comments are closed.