உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள உதவி: இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த கட்டுமானத் தொழிலாளி!

கடந்த அதிமுக ஆட்சியில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலாளி நாராயணசாமி, அதற்கு அப்போது உதவியதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தற்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் போடிக்காமன்வாடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. கட்டுமானத் தொழிலாளி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு சித்தையன்கோட்டையில் கட்டட கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரும்புக் கம்பியை தூக்கியபோது அது உயர் அழுத்த மின்வயரில் உரசியதில் அவரது இரு கைகளும் முழங்கைக்கு கீழே கருகின.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் பலனளிக்காததால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுiiரியன்பேரில், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்களை சந்தித்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 கைகளையும் பொருத்த முடியும் எனத் தெரிவித்தனர்.

இச் சூழலில், மரணம் அடைந்த ஒருவரின் 2 கைகளையும் தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

இதையடுத்து, 2018ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் 75 பேர் கொண்ட மருத்துவக் குழவினர் 13 நேரம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, நாராயணசாமிக்கு கைகளைப் பொருத்தினர். ஓராண்டு மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், இச் சிகிச்சைக்கு உதவியதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திண்டுக்கல் பிரசாரத்தில் நேற்று (செப்.6) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் நாராயணசாமி.

அவருக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி வந்ததும் நாராயணசாமிக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Comments are closed.