ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக, ஓணம் பண்டிகைக்கு முதல் நாளான உத்திராட நாளில் மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது. இதை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (செப்.4) 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடிக்கும் மேலாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. அவற்றில் 3 சில்லறை கடைகள் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவை.

கேரள மாநிலத்திலேயே அதிகமாக, கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து, கொல்லம் அருகேயுள்ள காவநாடு சில்லைறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவை தவிர, திருச்சூர் மாவட்டம் சாலக்குடி சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா சில்லறை மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள சில்லறை மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.