தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென புகுந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள், அலுவலகத்தில் இருந்த பேரூராட்சித் தலைவரும் பாமக மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலினை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சித்தனர்.
அத் திட்டம் தோல்வியடைந்ததால், நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
நல்வாய்ப்பாக, ம.க.ஸ்டாலின் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால், அக்கட்சியின் களம்பரம் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள் காந்திமதி நாளை (செப்.6) ஆடுதுறை வருவதை முன்னிட்டு ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மற்றும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் பேரூராட்சி அலுவலகத்தில் தமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத 4 பேர், மாவட்டச் செயலாளர் ஸ்டாலினை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த களம்பரம் ஒன்றியச் செயலாளர் இளையராஜா குறுக்கே புகுந்து தட்டிவிட்டார். இச்சம்பவத்தில் இளையராஜாவுக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அங்கிருந்த பாமகவினர் மாவட்டச் செயலர் ஸ்டாலினைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை அங்கிருந்து பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர்.
தங்களது திட்டம் தோல்வியடைந்ததால், பாமகவினரிடம் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக அம் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவத்தில், கார் ஓட்டுநர் அருண் காயமடைந்தார். அலுவலக கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தன.
இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், திருவிடைமருதூர் துணைக் கோட்ட டிஎஸ்பி ராஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, மர்ம நபர்கள் விட்டுச் சென்ற வெடிக்காத மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.