லாட்டரி வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் காவல்துறை அதிகாரிகளை ‘மாமூல் வாங்குபவர்கள் பேசாமல் பிச்சை எடுத்து சாப்பிடலாம்’ என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் ஓபன் ‘மைக்’கில் ஒரு பிடிபிடித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 56 வயது லாட்டரி வியாபாரி நசீர் அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார். இதற்கு போலீஸார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வரை புகார் சென்றது.
இந்நிலையில், கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின்படி, தனிப்படை போலீஸார் நசீரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் காவல்துறையைச் சேர்ந்த டிஎஸ்பி முதல் முதல் கடைநிலை காவலர்கள் வரை பலருக்கு பல லட்சம் ரூபாய் மாமூல் வழங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உள்பட 7 பேர் வேலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்ட காவல் அதிகாரிகளையும் ‘மைக்’கி;ல் அழைத்த எஸ்.பி.ஜெயக்குமார், இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவர் என எச்சரித்தார்.
அதோடு, “லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள், பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என ஒரு பிடிபிடித்தார் எஸ்பி ஜெயக்குமார்.

Comments are closed.