இங்கிலாந்தில் உள்ள உலகளவில் பிரசித்திபெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் படத்தை செப்.4-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் பெருமையுடன் ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அரங்குகளை வாடகைக்கு விடும் அஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நடைமுறையைப் பயன்படுத்தி அங்கு முதல்வரை வைத்து ஈவெரா படத்திறப்புக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இந் நிகழ்ச்சிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது என வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் ஈவெரா படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பைக் கண்டதும், அப்பல்கலைக்கழக பிஆர்ஓ மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈவெ ராமசாமி படத்திறப்பும் இல்லை’ எனத் தெரிவித்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த சிறிய அரங்குகள் 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும். அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், திமுகவினர் ஆக்ஸ்போர்டு வளாகத்தில் சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதில்தான் ஈவெரா படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக ஆக்ஸ்போர்டு கல்கலையில் நானே அரங்கை வாடகைக்கு எடுத்து, நிகழ்ச்சி நடத்தி உள்ளேன்.; இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலையில் வாடகைக்கு அரங்கை எடுத்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளும நடத்தப்பட்டுள்ளன என வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2013ல் கருணாநிதியின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணியை பாராட்டி ஆஸ்திரிய நாடு ‘கலைஞர் 90’ என்ற பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதாக திமுக தரப்பில் இருந்து செய்தி வெளியிடப்பட்டது.
ஆஸ்திரியாவில் 3000 ரூபாய் செலுத்தினால் யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட்டுக் கொள்ளலாம். அப்படிதான கருணாநிதியின் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இந்த உண்மை அடுத்த சில நாட்களிலேயே வெட்ட வெளிச்சமானது.
ஆஸ்திரிய அஞ்சல் தலை கதைபோல, ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் ஈவெரா படத்திறப்பு கதையும் உள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. தமிழக மக்கள் மத்தியில் இதுபோன்ற வேடிக்கைகளை செய்வது, திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது என வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.