பிறந்தநாள் பரிசு: மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த இளைஞர்!

மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியாரை கத்தரிக்கோலால் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

டெல்லி ரோகிணி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி ப்ரியா (34), இவர்களது மகன் சிராக் (Chirag).
ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற சிராக்கின் பிறந்தாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ப்ரியாவின் தாய் குசும் சின்ஹா (63) அங்கு சென்றுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பெறப்பட்ட பரிசுப் பொருள்கள் குறித்து கணவர் யோகேஷ், மனைவி ப்ரியா ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய குசும் சின்ஹா முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், தனது மனைவி ப்ரியா, மாமியார் குசும் சின்ஹா ஆகிய இருவரையும் கத்தரிக்கோலால் குத்திக் கொன்றுவிட்டு தனது மகன் சிராக்குடன் தப்பியோடிவிட்டார் யோகேஷ்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தனது தாய் குசும் சின்ஹா வீடு திரும்பாததால், அவரது மகனும் ப்ரியாவின் சகோதரனுமான மேக் சின்ஹா (Megh Sinha)  ஃபோன் செய்துள்ளார்.

ஃபோன் செய்து யாரும் எடுக்காததால், மேக் சின்ஹா நேற்று (ஆக.30) ப்ரியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால், கதவருகே ரத்தக் கறைகள் இருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மேக், பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்றார். அப்போது, வீட்டின் உள்ளே அவரது தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, ரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் கத்தரிக்கோலை கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள யோகேஷை தேடி வருகின்றனர்.

 

Comments are closed.