விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு, அப் பெண்ணின் பூத உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

கமுதி வட்டம் கொல்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மனைவி சந்தியா. வயது 27. இவர் ஆகஸ்ட் 27-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மூளையின் முழு செயல்பாட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர். இத்தகவல் அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு வழிகாட்டுதல்படி உடல் உறுப்பு தானம் செய்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என அவரது உறவினர்களிடம் மருத்துவ அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து, அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

அதன்படி, சனிக்கிழமை காலை, சந்தியாவின் இதயம், இரண்டு நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னைக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவப் பிரிவில் உடல் உறுப்புக்காக காத்திருக்கும் 6 நபர்களுக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட உள்ளன.

இந்நிலையில், சந்தியாவின் பூத உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதாராணி தலைமையில் அனைத்துத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மலர்வளையம் மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments are closed.