அரசின் அடக்குமுறை அதிகமாகிவிட்டது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பொருத்தவரை அரசின் அடக்குமுறை அதிகரித்து விட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 25,000 ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள்தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன என்றார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பொருத்தவரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும் பாடாக உள்ளது.

இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அண்ணாமலை.

மகாராஷ்ட்ராவில் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுவதாகவும், ஆனால், 9 நாள்களில், அங்கு போலீஸாரின் அடக்குமுறை இல்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

Comments are closed.