கலெக்டரையே ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள்!

தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை தேர்வு செய்வதற்காக,  தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள், காலாவதி ஆன அரசாணையைக் காட்டி, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் பெற்று அவரை ஏமாற்றியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவெனில், தேர்வுக் குழுவிலேயே இடம்பெறாத சிறார் நீதிமன்ற நீதிபதியிடம் அதே அரசாணையைக் காட்டி கையெழுத்துப் பெற்று அவரையும் ஏமாற்றியுள்ளனர் அத் தில்லாலங்கடி அதிகாரிகள்.

தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்ப அலகு (District Child Protection Unit) துவங்கப்பட்டு மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதில் 11 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அதில் பணிபுரிந்துவந்து சமூகப் பணியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அப் பதவிக்கு புதிதாக நபரைத் தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 04.03.2024 வரை 108 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அவற்றில் தகுதியான நபர்கள் என அவ்வலுவலக அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்ட 18 நபர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, திருவையாறு வட்டம் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் என்பவர் தேர்வு செய்யப்பட்டு, அவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.

அற்புதராஜை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்தது. அக்குழுவில் இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்கள் ஆவர்.


அற்புதராஜை தேர்வு செய்வதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த அதிகாரிகள், காலாவதி ஆன அரசாணையைக் காட்டி மாவட்ட ஆட்சிரையும், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவரையும் ஏமாற்றி அவர்களது கையெழுத்தைப் பெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

“2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காலாவதி ஆன அரசாணையின்படி அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் அற்புதராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தேர்வு சட்டப்படி செல்லாது. இல்லீகல் ஆகும்,” என்கிறார் சமூக ஆர்வலர் முகமது அப்துல் காதர்.

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான 4 பேர் கொண்ட குழுவை நீக்கிவிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 6 பேர் கொண்ட புதிய குழுவை அரசு நியமித்து 2022 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அரசாணையின்படி, இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் அக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை.

மாறாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்கள் ஆவர்.

ஆனால், இப்புதிய அரசாணையை மறைத்து, ஏற்கெனவே காலாவதி ஆன அரசாணையைக் காட்டி, மாவட்ட ஆட்சியர், சிறார் நீதிமன்ற நீதிபதி ஆகிய இருவரையும் ஏமாற்றி அவர்களது கையெழுத்தைப் பெற்றுள்ளனர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள் எனக் குற்றஞ்சாட்டுகிறார் அப்துல் காதர்.

சமூக ஆர்வலர் முகமது அப்துல் காதர்

 

“இம் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, இச் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், சட்டவிரோதமாக தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ள அற்புதராஜ் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஊதியத்தை திரும்பப் பெற வேண்டும்” என்கிறார் அப்துல் காதர்.

இம் முறைகேடுகள் குறித்து இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி விரைவில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் அப்துல் காதர் தெரிவிக்கிறார்.

Comments are closed.