2000 கிலோ ஜெலட்டின் வெடிமருந்துடன் பிடிபட்ட வேன்!

சுமார்  2,000 கிலோ ஜெலட்டின் வெடிமருந்து கடத்திச் சென்ற வேனை கோவை அருகே பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று (ஆக.26) காலை மடக்கிப் பிடித்துள்ளனர்.

கோவையில் இருந்து கேரளத்திற்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர், மதுக்கரை அருகே அவ் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அச் சோதனையில், வேனில் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மொத்த எடை 2000 கிலோ இருக்கும் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெலட்டின் வெடிமருந்துகளுடன் பிடிபட்ட அவ் வேனை மதுக்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார்.

வேனை ஓட்டிவந்த சுபேர் என்பவரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மதுக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கேரளத்தில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்கப் பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் மருந்து குச்சிகளை கொண்டு செல்வதாக வேனின் ஓட்டுநர் சுபேர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு உரிமம் உள்ளதா, இவ் வெடிமருந்துப் பொருள்களை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா என்பன குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.