லாக்-அப் மரணங்களை மூடிமறைக்க முயற்சி: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

லாக் அப் மரணங்களை தமிழக அரசு மூடி மறைக்க முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாகவும், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தியதாக மாரிமுத்து மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 29-ஆம் தேதி நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததாகவும் செய்திகள் உலா வருகின்றன.

அன்று மாலையே அவரை வேறு ஒரு வழக்கில் வனத்துறை கைது செய்துள்ளதைப் பார்த்தால், ஏதோவொரு பழிவாங்கும் நடவடிக்கை போலத் தெரிகிறது. காரணம், திமுக ஆட்சியில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்தால் லாக்-அப் மரணங்கள் பெருகி வருவதையும், அரசு அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதை மூடி மறைக்க முயற்சிப்பதையும் நாம் பலமுறை கண்டுள்ளோம். இனியும் இதுபோன்ற அராஜகங்கள் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது என அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

உயிரிழந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.