தூய்மைப் பணிகள் தனியார்மயமாவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது : திருமாவளவன்

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுத்து இருக்கிறோம். அரசுத் துறைகள் தனியார்மயமாகும் முயற்சியைக் கைவிட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மீண்டும் ஒருமுறை தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியார்மாயமாக்கப்பட்டு விட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் திருமாவளவன்.

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதைவிட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, தேர்தலுக்காகச் செய்தாலும் அது மக்களுக்குப் பயன்படும் என்றால் அதை வரவேற்கிறோம். ஜிஎஸ்டி வரியை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றார் திருமாவளவன்.

 

Comments are closed.