ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்ட இதயம்…

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாக பெறப்பட்டு, தஞ்சாவூரில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மகாராஷ்டிர இளைஞருக்கு பொருத்தப்பட்டது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக நகரின் மையப் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்;சைப் பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது இதயம் மற்றும் சிறுகுடல் தானமாகப் பெறப்பட்டன.

தானமாகப் பெறப்பட்ட இதயத்தை, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இதய செயலிழப்புக்குள்ளான மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 வயது நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு இதயத்தை விரைந்து எடுத்தவர திட்டமிடப்பட்டது. இதற்காக அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரி வளாகத்தில் பிரத்யேக இறங்குதளத்தை கல்லூரி நிர்வாகம் அமைத்து உதவியது.

இதையடுத்து, கல்லூரிக்கு வந்தடைந்த இதயத்தை, அங்கிருந்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் தடையற்ற போக்குவரத்து வழித்தடத்தை சென்னை பெருநகர போலீஸார் உருவாக்கித் தந்தனர்.

அதன் பயனாக, 2 நிமிஷங்களில் இதயம் மருத்துவமனைக்கு சென்றடைந்தது. அங்கு தயார் நிலையில் இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சைத்துறை இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், இதயத்தை வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தினர். இதன்மூலம் மகாராஷ்டிர இளைஞருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

Comments are closed.