பிரபல யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால் ஜாமின் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அப்போது, தனி நபரை மிரட்ட சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், போலீஸாரை வெளுத்து வாங்கினர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13-ஆம் தேதியன்று அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு சென்னை சிறையில் கார்டியாலஜிஸ்ட் மற்றும் நீரழிவு சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ் வழக்கு, நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் தனபால் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு 2025 டிசம்பர் 26 முதல் 2026 மார்ச் 25 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களுக்குப் பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால் நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனிநபர் சுதந்திரம் என்ற விஷயத்தை தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைளில் தலையிடுவதாக அமையும்.
நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக் கைதயின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டும் ஜாமினில் விடுவிக்க தயாராக உள்ளது. 2026 மார்ச் 25ஆம் தேதிக்கு முன்னர் அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்.
அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள் நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது.
அதிகாரிகள் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.